முன் பக்கம் கவிதைகள் கட்டுரை சினிமா புத்தகங்கள் ஈழம் அரசியல் உலகம் குட்டீஸ் பக்கம் பங்குச் சந்தை

Monday, January 24, 2011

காரணிகள் (சிறுகதை)


பேருந்திருந்து கோபாலகிருஷ்ணன் இறங்கும் போது, மறுபடி மழை வலுக்க ஆரம்பித்தது. சூட்கேசும் கையுமாக விறு விறுவென்று தார்ச்சாலையை குறுக்காகக் கடந்து அந்த வேப்ப மரத்தடிக்கு வந்தான். குடையெடுத்து வந்திருக்கலாமோ என்று யோசித்தான். முன்பு போல பிளாஸ்டிக் கவரை தலையில் கவிழ்த்துக் கொண்டு வேகமாக ஓடி வர இப்போது அவனால் இயலாது. அந்த ஊருக்கு புதிதாக வந்திருக்கும் ஆசிரியர் அவர்.
மழை கொஞ்சம் விட்ட மாதிரியிருந்த அந்த இடைவெளியில் அங்கிருந்து ஊருக்குள் இருக்கும் மேல்நிலைப் பள்ளியைப் பார்க்க நடந்தான். வயல் வெளியாகவும், கரிசல் காடுகளாகவும் இருந்தவை எல்லாம் இப்போது வீடுகள் நிறைந்திருந்தன. பள்ளிக்கு போகும் பாதையின் ஓரங்களில் தேநீர்க்கடைகளும் பலசரக்குக் கடைகளும் வந்திருந்தன.
இவன் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது போல பள்ளி அலுவலக வாசல் தலைமையாசிரியர் நின்றிருந்தார். கோபால கிருஷ்ணனுக்கு ஆங்கிலப் பாடம் நடத்திய சுந்தரம் சார், இப்போது தலைமையாசிரியர்.
‘‘வணக்கம் சார்..''
‘‘ம் வணக்கம்.. நீ .. நீ..''
‘‘நான் தான் சார்... கோபாலகிருஷ்ணன். உங்க மாணவன் தான் சார்....''
‘‘ஓ.. ஆமா...''
‘‘இங்க சயின்ஸ் டீச்சரா அப்பாயிண்ட் பண்ணியிருக்காங்க... ''
‘‘ஆமா.. ஆமா... எங்களுக்கும் மெசேஜ் வந்திருக்கு..''
யூ ஆர் வெல்கம்
‘‘நன்றி சார். நான் படிச்ச ஸ்கூல்லயே வேலை கிடைச்சிருக்குன்னு சந்தோஷமாகயிருந்தாலும் ஒரு பக்கம் பயமாயிருந்துச்சு சார்..''
ஏன்?
‘‘இல்லே சார்.. நான் படிச்ச காலத்துல இந்த ஊர் இப்படியா இருந்துச்சு; எப்பப் பார்த்தாலும் ஏதாவது கலவரம் நடந்துடும் குறிப்பா, ஜாதிச் சண்டை. ‘‘உம்ங்க் முன்னே அருவாளைத் தூக்கிடுவாங்க... இப்ப அந்தமாதிரி இல்லைன்னு நினைக்கிறேன்..''
‘‘இப்ப வரைக்கும் அப்படித்தான் இருந்துச்சு கோபால்.. நான் தான் முயற்சி செஞ்சு ஒரு வழியாகக் குறைச்சிருக்கேன். சரி. சரி உட்காரு..''
இருவரும் சேரில் வசதியாக உட்கார்ந்து கொள்ள உயரத்தில் மின் விசிறி ஓடும் சப்தம் மெதுவாகக் கேட்டுக் கொண்டிருந்தது.
பத்து வருசத்துக்கு முந்தி இங்க ஒரு ஜாதிக் கலவரம் நடந்தது ஞாபகமிருக்கா சார்..
ஆமா, அய்யா அப்ப நான் இங்கிலீஷ் டீச்சரா இருந்தேன். ஒரு சின்ன விஷயம் தான்... டீக்கடையில் வைச்சு நடந்தது.
என்ன என்பது போல அவரைப் பார்த்தான் கோபாலகிருஷ்ணன்.
‘‘அந்த வடக்குத் தெருவுல ஒரு மிடரிக்காரன் இருந்தான். அன்னிக்கு மேலத் தெரு டீக்கடைக்கு வந்திருக்கான். டீ கேட்டதுக்கு அந்தக் கடைக்காரன் டீயைப் போட்டு சிறட்டையில கொடுத்திருக்கான். உடனே மிட்டரிக் காரனுக்கு கோபம் வந்துச்சு. டீயைக் கீழே ஊத்திட்டு சிறட்டையை பக்கத்துல கிடந்த கல்லுல விட்டெறிஞ்சுட்டு அவன் பாட்டுக்குப் போயிட்டான். ஆனா விஷயம் அதோட முடியலே. அந்த மிட்டரிக்காரன் டீக்கடைக்காரனையும் அவன் மூலமா அந்த ஜாதிக்காரன்களையும் அவமதிச்சிட்டதா நெனைச்சு இவனையும், இவன் ஆளுங்களையும் அடிச்சுட்டாய்ங்க; பதிலுக்கு அவங்க அடிக்க பெரிய கலவரமாகிப் போச்சு''.
‘‘ஆமாம் சார்.. எல்லாக் கலவரத்துக்கும் ஒரு சின்ன விஷயம் தான் தீப் பொறியா இருந்திருக்கு. ஆனா இப்ப மாறிடுச்சுன்னு தான் தோணுது''.
‘‘உண்மை தான் கோபால்.. ஆனா அதுக்கு நான் எவ்வளவு பாடுபட வேண்டியிருந்துச்சு தெரியுமா''
அப்படியா சார்?
பின்னே.. ஜாதிகள் இல்லையடி பாப்பரூங்குறபாரதியின் பாட்டை ஃப்ளக்ஸ்ல பிரிண்ட் போட்டு ஊர் சாவடியில தொங்க விட்டிருக்கேன். அதைப் படிக்கிறஎல்லோருக்குள்ளேயும் ஒற்றுமை உணர்வு தலை தூக்கும். ஸ்கூல் பிரேயர்லயும் சுதந்திர தின விழா, குடியரசு தின விழான்னு எல்லா ஃப்ங்க்ஷன்லயும் ஜாதியில்லாத சமுதாயம் படைக்கணும்னு மாணவர்கள் மத்தியில விழிப்புணர்வை ஊட்டுறமாதிரி பேசுவேன்.
‘‘அதெல்லாம் மக்கள் மத்தியில் நல்லா வேலை செய்யுது''
‘‘அப்புறம் போன மாசம் நம்ம ஊருக்கு ஒரு அரசியல் தலைவர் வந்தார் போல சார்...''
ஆமாம், அவர்கிட்டே நான் இந்த விஷயத்தை மறைமுகமா சொல்ஜாதி பாகுபாடு இல்லாம மக்கள் ஒற்றுமையா வாழறதுக்கு வழி சொல்றமாதிரி பேசுங்கன்னு சொன்னேன். அவரும் அதே போல பேசுனாரு.. சரி சரி வா டீ சாப்பிட்டு வரலாம்.
‘‘சரி சார்''
இருவரும் மெதுவாக நடந்து ஊருக்குள்ளிருந்த ஒட்டலுக்கு வந்தார்கள். மக்களைக் கவனித்தான் கோபாலகிருஷ்ணன். பத்து வருடத்துக்கு முன்பிருந்தது போல் இல்லை. ஜனங்கள் அனைவரும் தோள் மீது கைபோட்டுக் கொண்டு திரியா விட்டாலும் விரோத பாவம் மறைந்திருந்தது.
ரெண்டு டீ போடுங்க.. அப்புறம் செல்லைபாண்ணாச்சி, இது, ‘‘கோபால கிருஷ்ணன், நம்ம ஸ்கூலுக்கு புதுசா டீச்சரா வந்திருக்காரு... பக்கத்துல உசிலம் பட்டியிலேருந்து வந்து நம்ம ஸ்கூல்ல படிச்ச பையன்.. ''
‘‘ம்.. இப்ப ஊரு எப்படியிருக்கு தம்பி''
‘‘நல்லாயிருக்குண்ணாச்சி''
‘‘அதுக்கு எவ்வளவு பாடுபட்டிருக்கேன் நானு.. என்ன செல்லையாண்ணே.. அதைத்தான் இவ்வளவு நேரம் சொல்ட்டிருந்தேன்.. இப்ப நம்ம ஊருல ஜாதிச் சண்டையே வரதில்லேல்ல...'' தலையை உயர்த்திப் பேசினார் தலைமையாசிரியர்.
‘‘ஆமாம் சார்.. எப்படி வரும்? இந்தாங்க டீ எடுத்துக்கோங்க.. '' அர்த்த புஷ்டியால் சிரித்தார் செல்லையா. அவர் கையில் இரண்டு பிளாஸ்டிக் கோப்பைகள் இருந்தன.

.ஸ்வரமஞ்சரி.
சிவகாசி, இந்தியா. பேச: +919843979097
****************